| ADDED : ஜூலை 09, 2024 01:33 AM
பந்தலூர்;நெல்லியாளம் நகராட்சியின் திட்டமிடாத பணிகளால் மக்ணகளின் வரிப்பணம் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்வதில் நகராட்சி நிர்வாகத்தின் வேகம் குறைவாக உள்ளது. மக்களுக்கு தேவையான இடங்களில், அடிப்படை மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்கு பதில், ஒப்பந்ததாரர்கள் கூறும் இடங்களில் அவர்கள் நினைக்கும் பணிகளை மேற்கொள்ளும் நிலையே தொடர்கிறது. இந்நிலையில், பந்தலுார் பஜாரில் நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, அம்மா உணவகம், நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லும் சாலையை ஒட்டி, அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை வெள்ளம் வழிந்தோட சிறிய அளவிலான கால்வாய் அமைத்து அது மூடப்பட்டது. ஆனால், அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் மழை காலத்தில் மண் கலந்த தண்ணீர் கால்வாயில் சென்று அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மக்களின் புகாரையடுத்து, கால்வாயை இடிக்கும் பணி நடந்தது.மக்கள் கூறுகையில், 'முறையாக திட்டமிடாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருவது தொடர்கிறது. பணிகள் மேற்கொள்ளும் முன்பாக முறையாக திட்டமிட்டு அதனை செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.