| ADDED : ஜூன் 16, 2024 11:45 PM
கூடலுார்:கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மார்த்தோமாநகர் -புத்துார் வயல் சாலை, தனியார் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு காட்டு யானை முகாமிட்டது. அப்போது, புத்துார் வயல் பகுதியிலிருந்து பைக்கில், கூடலுார் நோக்கி வந்த இரண்டு இளைஞர்கள், காட்டு யானையை பார்த்து பைக்கை திருப்பி தப்பிக்க முயன்றனர்.ஆனால், யானை ஆக்ரோசமாக அவர்களை நோக்கி வந்ததால் பைக்கை சாலையில் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்து, தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்து உயிர் தப்பினர். இது தொடர்பான, சி.சி.டி.வி., வீடியோ வைரலாகி உள்ளது.இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர், யானை ஊருக்குள் வருவதை தடுப்பதுடன், யானை நடமாட்டம் குறித்து, ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை செய்தால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் கண்காணித்து அதனை விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். இரவில், யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன், பைக்கில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.