ஊட்டி:ஊட்டியில் மலர் கண்காட்சி நாளில், போக்குவரத்து நெரிசல் இல்லாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.ஊட்டியில் கோடை சீசன் துவங்கும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். மலர் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழாவின் போது, நகர் சாலைகளில் ஊர்ந்து செல்லும் சுற்றுலா வாகனங்களால், மணிக்கணக்கில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக, தொட்டபெட்டா சந்திப்பு, எச்.பி.எப்., சாலை மற்றும் குன்னுார் சாலைகளில் நெரிசல் நிறைந்து காணப்படும். நடப்பாண்டு நெரிசலை தவிர்க்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி, கேரளா, கர்நாடக வாகனங்கள் நகரத்திற்கு வருவதை தவிர்க்கும் வகையில், கால்ப் கிளப் சாலையிலும், சமவெளி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், ஆவின் பகுதியிலும், கோத்தகிரி வழியாக வரும் வாகனங்கள் கார்டன் சாலையிலும் நிறுத்தப்பட்டன.வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், அந்தந்த நிறுத்தங்களில் இருந்து சுற்றுலா மையங்களை காண, 12 சுற்று பஸ்கள், இடைவிடாது இயக்கப்பட்டது. அத்துடன், போலீசாரும் அந்தந்த சந்திப்புகளில் போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல், சாதாரண நாட்களை போல, வாகனங்கள் இயக்கப்பட்டன. நேற்று நடந்த மலர் கண்காட்சி துவக்க நாளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்ததால் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாததால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.
உள்ளூர் வாகனங்களுக்கு சலுகை வேண்டும்
ஊட்டி கலெக்டர் அலுவலக சாலையில் இருந்து சுற்றுலா வாகனங்கள் 'சர்ச்ஹில்' சாலை வழியாகவும், ஊட்டி எஸ்.பி.ஐ., பாங்க் சந்திப்பு வழியாகவும் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.அதில், 'டி.என்.,43' வாகனங்களையும் திரும்பி விடுவதால், உள்ளூர் வாகன உரிமையாளர்கள் தாவரவியல் பூங்கா சாலை வரை செல்ல வேண்டி உள்ளது. மக்கள் கூறுகையில், ' எதிர்வரும் நாட்களில், உள்ளூர் வாகனங்கள் சிரமம் இன்றி சென்றுவர, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.