கூடலுார்:கேரளாவை சேர்ந்தவரின் காரை மறித்து, விலை உயர்ந்த மொபைல் போனை கொள்ளையடித்து தலைமறைவான இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரளா மாநிலம் மன்னார்குடியை சேர்ந்தவர் அசைனார். இவர் கடந்த, 30ம் தேதி கூடலுார் தேவர்சோலை வழியாக அய்யன்கொல்லிக்கு காரில் சென்றுள்ளார்.பாடந்துறை அருகே இருவரிடம் வழி குறித்து கேட்டுள்ளார். 'காரில் இருந்த அசைனாரிடம் ஹவாலா பணம் இருக்கலாம்,' என, நினைத்த அவர்கள் அவருக்கு தவறான வழியை கூறியுள்ளனர்.சிறிய துாரம் அவ்வழியில் சென்ற அசைனார், தவறான வழியில் செல்வதை அறிந்து, காரை திருப்பி உள்ளார். அப்போது, அவருக்கு வழி கூறிய நபர்கள் அங்கு வந்து, அசைனார் காரை நிறுத்தி அவரை தாக்கி, ஹவாலா பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். 'தன்னிடம் அதுபோன்ற பணம் இல்லை,' என, அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, அவரிடம் இருந்த, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபைல்போன், 1000 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். உடனடியாக அசைனார் தேவர்சோலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஜ., கோவிந்தராஜ், எஸ்.எஸ்.ஐ., இப்ராஹிம் கொண்ட தனிப்படை அமைத்து பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, அசைனார் கூறிய அடையாளங்களின் அடிப்படையில், பல்வேறு நபர்களிடம் விசாரணை நடநத்தினர்.இதன் அடிப்படையில், பாடந்துறையை சேர்ந்த முகமதுசாலி,39, நிலோபர்,30, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். போனை எடுத்து சென்ற மற்றொருவரை தேடி வருகின்றனர்.