சாலையில் நிறுத்தும் வாகனங்கள் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குன்னுார்;குன்னுார் சிம்ஸ்பார்க் சாலை ஓரத்தில் நிறுத்தும் வாகனங்களால் மெயின் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.குன்னுார் சிம்ஸ்பார்க் பகுதியில் போதிய பார்க்கிங் வசதி தனியாக ஏற்படுத்தாத நிலையில் சுற்றுலா வாகனங்கள் மாநில நெடுஞ்சாலை இடத்தில் நிறுத்தப்படுகிறது. இதற்கு நகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.இங்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் குழாய்கள் சாலையோரத்தில் உள்ளன. பாஸ்டியர் நிறுவனம், உட்பட நகராட்சியின் குடிநீர் குழாய்கள் வாகனங்களால் உடைபட்டு குடிநீர் வீணாகி வருகிறது.கவுன்சிலர் உமாராணி கூறுகையில், ''தற்போது சில நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது போன்று குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சிம்ஸ் பார்க் பகுதியில் வாகனங்களால் இவ்வாறு குழாய்கள் உடைவதை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என்றார்.