உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பணம் விரயம்: அனுமதி பெறாமல் கட்டிய குடிநீர் தொட்டியால் செலவுத் தொகை அதிகாரிகளிடம் வசூலிக்கப்படுமா?

அரசு பணம் விரயம்: அனுமதி பெறாமல் கட்டிய குடிநீர் தொட்டியால் செலவுத் தொகை அதிகாரிகளிடம் வசூலிக்கப்படுமா?

மேட்டுப்பாளையம்: தேக்கம்பட்டி ஊராட்சியில், உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பிக்கு அடியில், கட்டிய குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடிக்கப்பட உள்ளது. இதற்கான செலவுத் தொகையை ஊராட்சி தலைவர் மற்றும் அனுமதி கொடுத்த அதிகாரிகளிடம், வசூல் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கூறினர். காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், பரப்பளவில் பெரியது தேக்கம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில், 2020--21ம் ஆண்டு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், குடிநீர் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்றன. இதற்காக புதிதாக பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

ரூ. 9.20 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி

தேக்கம்பட்டி கெண்டேபாளையம் அருகே, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் சாலையூரில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலைத் தொட்டி, 9.20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நிலைத் தொட்டியின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்கின்றன. இதைப் பார்த்த மின்வாரிய அதிகாரிகள், மின்சார கம்பியின் அடியில் தண்ணீர் தொட்டி கட்டக் கூடாது. இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொட்டி கட்டக்கூடாது என கூறியுள்ளனர். ஆனால் அதையும் மீறி தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மேல்நிலைத் தொட்டியை கட்டி முடித்துள்ளது. இதில் பிரச்னை இருப்பதால், ஓர் ஆண்டு ஆகியும் இதற்கு இன்னும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உயர் மின் அழுத்த மின்சார கம்பிகள் செல்லும் வழியில், எந்த கட்டடங்களும் கட்ட மின்சார வாரியம் அனுமதிப்பதில்லை. இந்த மின் கம்பிகள் செல்லும் வழியில், மரங்கள் இருந்தால் அதை வெட்டி அகற்றும்படி, மின்வாரிய அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால் தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம், மின்வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், மேல்நிலைத் தொட்டியை கட்டி முடித்துள்ளது.

அனுமதி பெற்றார்களா?

இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை கட்ட, ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பார்கள். தீர்மானத்தின் அடிப்படையில் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் உள்பட அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து, மேல்நிலைத் தொட்டியை கட்ட அனுமதி வழங்கியிருப்பர். அதன்பின் தொட்டியை கட்டி முடித்துள்ளனர். தொட்டியை முழுமையாக கட்டி முடித்த பின், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இவ்வளவு பணிகளும் ஓராண்டுக்கு மேல் நடைபெற்றுள்ளன. மேல்நிலைத் தொட்டி கட்டுமிடத்தில் உயர் அழுத்த மின்சார கம்பி செல்வதை, ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் பார்க்காமலேயே மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோன்று அனுமதி கொடுத்த காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்ய வில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது இந்த மேல்நிலைத் தொட்டியை இடிக்க மின்வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர். அனுமதி பெறாமல் மேல்நிலை தொட்டி கட்டியதால், அரசு நிதி விரயமானது. எனவே இந்த மேல்நிலைத் தொட்டியை கட்ட ஆன செலவுத் தொகையை, ஊராட்சி தலைவர் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் வசூல் செய்ய வேண்டும். மேலும் அரசின் திட்டத்தை அஜாக்கிரதையாக செயல்படுத்திய ஊராட்சி தலைவர் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

இடிக்க முடிவு

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரியிடம் கேட்ட போது, 'பரளி மின் உற்பத்தி நிலைய அலுவலகத்தில் இருந்து, மேல்நிலைத் தொட்டி கட்டும் போது, தொட்டி கட்டக் கூடாது என, ஊராட்சி நிர்வாகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால் அதையும் மீறி கட்டியதால் அதை இடிக்கும்படி கூறியுள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை