| ADDED : நவ 24, 2025 05:23 AM
ஊட்டி: ஊட்டியில் கேரட் கழுவ சென்ற வேன் தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 13 பேர் காயமடைந்தனர். ஊட்டி அடுத்த தேனாடுகம்பை அருகில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த, 13 தொழிலாளர்கள் வேனில் கேரட் அறுவடைக்கு சென்றனர். அறுவடை முடிந்த பிறகு கேரட்டை கழுவி சுத்தம் செய்ய கேரட் கழுவும் இயந்திரம் இருக்கும் இடத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதாலும், பனிமூட்டம் இருந்ததாலும் டிரைவர் மெதுவாக வேனை இயக்கியுள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த கேரட் தோட்டத்திற்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேனில் இருந்த டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் தனியாக கழன்று விழுந்தன. வேனில் இருந்தவர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர், மேலும், 6 பேர் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அதிகாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டெருமை திடீரென வேனின் குறுக்கே சென்றதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.