தீபாவளி அமாவாசை பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கோத்தகிரி: அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நடந்த, தீபாவளி அமாவாசை சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை பூஜை நடத்தப்படுகிறது. இந்த மாதம், தீபாவளி அமாவாசை என்பதால், கிராம மக்கள் ஒருங்கிணைந்து, சிறப்பு பூஜை நடத்தினர். அதிகாலை முதல் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோவில்களில் தீபாவளி அமாவாசை சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.