வலு இழந்த பாலத்தில் தடுமாறும் பயணம்
பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி பசுமை நகர், கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட பாலம் வலுவிழந்து காணப்படுவதால், மக்கள் அச்சத்துடன் நடக்க வேண்டிய நிலை தொடர்கிறது. பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சப்பந்தோடு பசுமை நகர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு செல்ல, சேரம்பாடி மின்வாரிய அலுவலகம் எதிரே செல்லும் சாலையில் சென்று, கிராமத்திற்கு செல்லும் ஒற்றையடி நடைபாதையில் பயணிக்க வேண்டும். இந்த பகுதிக்கு வாகனங்கள் ஏதும் செல்லாத நிலையில், இந்த வழியாக பாயும் ஆற்றை கடக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர், ஊராட்சி மூலம் இரும்பினால் ஆன நடைபாலம் அமைக்கப்பட்டது. பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லாத நிலையில், பாலம் தற்போது வலுவிழந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், இந்த பகுதி மக்கள் வலுவிழந்த பாலத்தில், தடுமாறி ஆபத்தான நிலையில் பயணித்து வருகின்றனர். இந்த பகுதியில் இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள், தண்ணீர் குடிக்க வந்து செல்லும் நிலையில் மக்கள் வனவிலங்கு அச்சத்துடனும், ஆற்றை நடுக்கத்துடனும் கடந்து சென்று வருகின்றனர்.உள்ளூர் மக்கள் கூறுகையில்,' எங்கள் கிராமத்துக்கு செல்லும் பாலம் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், நோயாளிகளை கொண்டு செல்லவும், மழை காலங்களிலும் மிகவும் அவதிப்படுகிறோம். இரவில் வரும் போது, சில நேரங்களில் வன விலங்குகள் வந்தால் பாலத்தில் ஓட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை சீரமைக்க பல முறை உள்ளாட்சி அமைப்பில் மனுக்கள் கொடுத்தும் பயனில்லை. எனவே, இப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிரந்தரமாக பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.