உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆடு மேய்த்த பெண்: புலி தாக்கி பலி: ஆம்புலன்சை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

 ஆடு மேய்த்த பெண்: புலி தாக்கி பலி: ஆம்புலன்சை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

கூடலுார்: மசினகுடி மாவனல்லா அருகே, புலி தாக்கி இறந்த பெண்ணின் உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்சை, முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், மசினகுடி மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் நாகியம்மாள்,60. இவர், உட்பட மூன்று பெண்கள் நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில், ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். மதியம், 2:40 மணிக்கு திடீரென அங்கு வந்த புலி நாகியம்மாளை தாக்கி இழுத்து சென்றது. உடன் சென்றவர்கள் சப்தமிட்டனர். அப்பகுதி மக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாவனல்லா ஆற்றுக்குள் நாகியம்மாள் உடல் மற்றும் தலை தனித்தனியாக கிடந்தன. தகவலின் பேரில் அங்கு வந்த வனச்சரகர் தனபால் மற்றும் வன ஊழியர்கள், நாகியம்மாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்வதற்காக தனியார் ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது, அப்பகுதியில் கூடிய மக்கள், புலியிடமிருந்து பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, ஆம்புலன்சை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். அவர்களிடம், மசினகுடி துணை இயக்குனர் (பொ) கணேசன், கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'புலியை, அடையாளம் கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்; அதற்கான பணி உடனடியாக துவங்கப்படும்,' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மசினகுடி போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட எஸ்.பி., நிஷா சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார். வனத்துறையினர், 'டிரோன்' உதவியுடன், புலியின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை