உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  கூட்டுறவு வங்கியில் வட்டி குறைத்ததாக... குற்றச்சாட்டு!ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 கூட்டுறவு வங்கியில் வட்டி குறைத்ததாக... குற்றச்சாட்டு!ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

குன்னுார்:குன்னுாரில் உள்ள, கூட்டுறவு நகர வங்கியில் கடந்த, 2020ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு, 2 சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.குன்னுார் கூட்டுறவு நகர வங்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வங்கியில் கடந்த, 2020ம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கிற்கு இரண்டு சதவீத வட்டி மட்டுமே வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் வங்கி நிர்வாகம்; கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

விசாரணை நடத்த வேண்டும்

'லஞ்சம் இல்லாத நீலகிரி' அமைப்பின், ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறியாவது: 'ரிசர்வ்' வங்கி வழிகாட்டுதலின்படி சேமிப்பை கணக்கிட்டு குறைந்தபட்சம், 3.5 சதவீத வட்டி வழங்க வேண்டும். நலிவடைந்த வங்கிகளில் ரிசர்வ் வங்கி அனுமதியுடன் வட்டி விகிதம், 2.75 சதவீதமாக வழங்கலாம். இதனை வாடிக்கையாளர்கள் அறியும் வண்ணம் அறிவிப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், குன்னுார் நகர கூட்டுறவு வங்கியில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், 2 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வங்கியின் நஷ்டத்தை ஈடுகட்ட இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது,'என, தெரிவித்துள்ளனர். இதனை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் மறைத்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு, 18 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய வட்டியை வங்கி நிர்வாகம் சுரண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு மனோகரன் கூறினார்.

வங்கி லாபத்துடன் இயங்குகிறது

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் கூறுகையில்,'' கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு, 2.75 சதவீதம் வட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வங்கியில் உள்ள 'டிஸ்ப்ளே' போர்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி லாபத்துடன் தான் இயங்கி வருகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் வங்கி கம்ப்யூட்டர் பதிவேட்டிலும், 2.75 சதவீதம் உள்ளது. ஒருவேளை, 2 சதவீதம் என வாடிக்கையாளர்களிடம் பதிவு இருந்தால், அதனை நேரடியாக கொண்டு வந்து காண்பிக்கலாம். அதன் பிறகு அதற்கான காரணம் என்ன என்பது ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை