கடைகளை இடித்து கட்ட ரூ.41.50 கோடி ஒதுக்கீடு
குன்னுார்: குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து கட்ட, 41.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குன்னுாரில் நகராட்சிக்கு உட்பட்ட, 896 கடைகளில் 724 கடைகள் மார்க்கெட்டில் உள்ளன.இங்குள்ள பெரும்பாலான பழைய கடைகள் வியாபாரிகளால் புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 'ஐ.டி.யு.பி., காம்ப்ளக்ஸ்' என, நகராட்சி சார்பில் புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டது.இந்நிலையில், குன்னுாரில் பல்வேறு அரசு பழைய கட்டடங்கள் இடித்து புதிய கட்டுமான பணிகளுக்கு நகராட்சி தீவிரம் காட்டி வருவதை போல, மார்க்கெட் கடைகளையும் இடித்து புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக மார்க்கெட் பகுதியில் மண் பரிசோதனை மேற்கொண்டதுடன், திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. ஊட்டியில், 36 கோடி ரூபாயில் மார்க்கெட் கடைகளை இடித்து கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து புதிகாக கட்டுவதற்கு, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.குன்னுார் நகராட்சி பொறியாளர் வேலுச்சாமி கூறுகையில், ''மார்க்கெட் கடைகள் இடித்து கட்ட, 41.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, டெண்டர் விடப்படும். முதலில் எந்த பகுதியில் இடித்து கட்டுவது என்பது புதிய கமிஷனர் வந்த பிறகே முடிவு செய்யப்படும்,'' என்றார். குழப்பத்தில் வியாபாரிகள்
கடந்த தேர்தலின் போது,'மார்க்கெட் கடை வாடகை பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,' என, வாக்குறுதி அளித்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது. எனினும், வாடகை உயர்வு செய்யப்பட்டதுடன், '2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மறு மதிப்பீடு செய்த வாடகை நிலுவை தொகை மற்றும் 2019 முதல் 2022 வரையில் 3 ஆண்டுகளுக்கு 15 சதவீதம் வாடகை உயர்வு செலுத்த வேண்டும்,' என, உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து தொகையை வசூலிக்க நகராட்சி தீவிரம் காட்டி 'சீல்' வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. எனினும், 18 லட்சம் ரூபாய் வரை வாடகை பாக்கி வைத்த வியாபாரிகள் சங்க கட்டடத்தை விட்டு, சிறு வியாபாரிகளின் கடைகளுக்கு மட்டும் 'சீல்' வைத்தது. தற்போது, 'கடைகள் இடித்து கட்டும் நிலையில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,' என, கூறினாலும், அதற்கான முழு வரைவு திட்டங்கள் எதுவும் நகராட்சி உறுதி செய்யப்படாததால், வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.