ஒப்பந்த முறைக்கு மாறும் வேட்டை தடுப்பு காவலர் பணி; வனப்பாதுகாப்பு கேள்விக்குறி
கூடலுார்; 'முதுமலை உள்ளிட்ட நீலகிரி வனப்பகுதிகளில், வேட்டை தடுப்பு காவலர் பணியிடங்களை ஒப்பந்த முறைக்கு மாற்றினால், எதிர்காலத்தில் வன பாதுகாப்பு கேள்விக்குறியாகும் ஆபத்து உள்ளது,' என, வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், வன கண்காணிப்பு பணிகளில் பழங்குடியினர் உள்ளிட்ட பலர் வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், வன காவலர்களாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகின்றனர். பலர் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்துள்ளனர். ஒப்பந்த முறைக்கு மாற்றம்
இந்நிலையில், அரசு உத்தரவுப்படி வேட்டை தடுப்பு காவலர்களை ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களாக மாற்றும் நடவடிக்கையை வனத்துறை துவக்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதுமலை மசினகுடி கோட்டம் சிகூர், சிங்கார வன சரகத்தில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்கள், 20ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வன அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் நேற்று பணிக்கு திரும்பினர். வேட்டை தடுப்பு காவலர்கள் கூறுகையில், 'எங்களை ஒப்பந்த பணியாளர்களாக மாற்றினால், பதவி உயர்வு உள்ளிட்ட அரசு சலுகைகள் கிடைக்காது. எனவே, தற்போதுள்ள நிலை தொடர வேண்டி, உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட உள்ளோம். வன பாதுகாப்பு கருதி இன்று(நேற்று) பணிக்கு திரும்பினோம்,' என்றனர். இந்நிலையில், வேட்டை தடுப்பு காவலர் பணியிடங்களை ஒப்பந்த முறைக்கு மாற்றும் திட்டத்துக்கு, வன வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வனப்பாதுகாப்பு கேள்வி குறி?
கூடலுார் பிரகதி அறக்கட்டளை அறங்காவலர் சுகுமாரன் கூறியதாவது:நீலகிரியின் வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பில் வேட்டை தடுப்பு காவலர்களில் பங்கு தவிர்க்க முடியாதது. இவர்கள் பணியிடங்களை ஒப்பந்த முறைக்கு மாற்றினால் எதிர்காலத்தில் வெளிநபர்கள் இப்பணிக்கு வரவும், இப்பணியை நம்பி உள்ள பழங்குடியினர் உள்ளிட்ட உள்ளூர் இளைஞர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. அதில், முதுமலை போன்ற புலிகள் காப்பகத்தில் தனியார் ஒப்பந்ததை அனுமதிப்பது பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பதவி உயர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், வேட்டை தடுப்பு காவலர் தங்கள் பணியில் முழு ஈடுபாடுடன் பணியாற்றி வருகின்றனர். தனியாருக்கு வழங்கப்படும் பட்சத்தில், வெறும் சம்பளத்துக்கு பணி செய்யும் நிலை ஏற்பட்டால், வனப்பாதுகாப்பு கேள்வி குறியாகும். எனவே, இப்பணியிடங்களை தனியார் ஒப்பந்த முறைக்கு மாற்றும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்,'' என்றார். இதே கருத்தை பல வன உயிரின ஆர்வலர்கள் கூறினர்.முதுமலை மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார் கூறுகையில்,'' வேட்டை தடுப்பு காலவலர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்பட உள்ளதால், அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினர்,'' என்றார்.