| ADDED : மார் 17, 2024 01:38 AM
குன்னூர்:-குன்னூரில் 5வது நாளாக எரியும் காட்டுதீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி அடித்தும் முழுமையாக அணைக்க முடியவில்லை.நீலகிரி மாவட்டம், குன்னூர் பாரஸ்ட் டேல் பகுதியில் கடந்த 12ம் தேதி தேயிலை தோட்டத்தில் பரவிய தீ அருகில் இருந்த வனப்பகுதிக்கு பரவியது.இங்கு சாம்பிராணி உட்பட பல்வேறு மரங்கள் எரிந்து சாம்பலாயின.தொடர்ந்து பற்றி எரியும் வனத்தீயை கட்டுப்பபடுத்தும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தன்னார்வலர்கள் என, 100 பேர் 4 நாட்களாக ஈடுபட்டனர். எனினும் கட்டுக்கடங்காமல் தீ பரவி கடும் புகை மூட்டம் ஏற்பட்டு அணைக்க முடியாமல் திணறினர்.தீயை அணைக்க நேற்று மதியம் 1:30 மணிக்கு கோவை சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. இதில் இணைக்கப்பட்ட ஹெலி பக்கெட்டில் தண்ணீரை ரேலியா அணையில் இருந்து நிரப்பி கொண்டு வந்து பாய்ச்சி அணைக்கப்பட்டது.10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ஹெலி பக்கெட் மூலம் 4 முறை தீ பரவும் இடங்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.மலையின் ஒரு பகுதியில் அணைத்த போதும் எதிரான இடத்தில் மேற்கொள்ளப்படவில்லை. சுமார் 30 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்துள்ளன. இதனால், பசுமையான மரங்களும் தீயில் கொளுந்து விட்டு எரிந்தது. நீலகிரி டி.எப். ஓ, கவுதம் தலைமையில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு அணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது மாவட்ட கலெக்டர் அருணா உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.