பணமில்லா பரிவர்த்தனை: கியூ.ஆர் கோடு திட்டம் கூட்டுறவு நிறுவனத்தில் துவக்கம்
ஊட்டி : நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தின் சுயசேவை பிரிவில் பணமில்லா பரிவர்த்தனைக்கான, 'கியூ.ஆர்' கோடு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் பணமில்லா பரிவர்த்தனைக்கான 'கியூ.ஆர்' கோடு மூலம் அனைத்து பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, நீலகிரியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் இந்த பணமில்லா பரிவர்த்தனைக்கான கியூ.ஆர்., கோடு மூலம் பணமில்லா பரிவர்த்தனைகளை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி , மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், நீலகிரி கூட்டுறவு நிறுவனத்தின் சுய சேவை பிரிவில் இந்த பணமில்லா பரிவர்த்தனைக்கான கியூ.ஆர்., கோடு திட்டம் முதன் முதலில் துவக்கப்பட்டது. இதனை நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் துவக்கி வைத்த பின், கூறுகையில்,''மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் உட்பட பிற கூட்டுறவு நிறுவனங்களிலும் பணமில்லா கியூ.ஆர்., கோடு திட்டம் படிப்படியாக துவக்கப்படும்,'' என்றார்.