சல்லிவன் நினைவு பூங்காவில் மேம்பாட்டு பணி
கோத்தகிரி; கோத்தகிரி ஜான் சல்லிவன் நினைவு பூங்காவில், மேம்பாட்டு பணி நடந்து வருவதால், அடுத்த ஆண்டு விழா நடத்த வாய்ப்பு அதிகரித்துள்ளது.கோத்தகிரியில், கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் நேரு பூங்கா ஆகியவை, சுற்றுலா மையங்களாக இருந்து வருகின்றன. நேரு பூங்காவில், முதல் நிகழ்ச்சியாக, காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.தற்போது, கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் அமைந்துள்ள, மாவட்டத்தில் முதல் கலெக்டர் அலுவலகமான, ஜான் சல்லிவன் நினைவகம் அருகே, அவரது நினைவாக, எட்டு ஏக்கர் பரப்பளவில், ஜான் சல்லிவன் நினைவு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.பூங்காவை, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. மலை உச்சியில் அமைந்துள்ள பூங்காவில், தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பசுமையான புல்தரை, பார்வையாளர்கள் அமரும் வகையில் கல் மற்றும் மரத்திலான இருக்கைகள் அமைக்கப்பட்டு, அலங்கார செடிகளுடன், மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.வரும் நாட்களில், பூங்காவை மேலும் மேம்படுத்தும் வகையில், நிதி கோரப்பட்டுள்ளது. இந்த நிதி கிடைக்கும் பட்சத்தில், பூங்கா சிறப்பாக பராமரிக்க வாய்ப்பு உள்ளது. நடப்பாண்டு, காய்கறி கண்காட்சி அடுத்து, சல்லிவன் நினைவு பூங்காவில் விழா நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.ஆனால், பணி முழுமை பெறாத நிலையில், அந்த முடிவு கைவிடப்பட்டது. முதல் கலெக்டர் சல்லிவன் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது, அரசுக்கு வருவாய் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.