உபதலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்தை பேணிக்காக்க மக்களுக்கு அறிவுரை
குன்னூர் : 'ஊராட்சியில் போதியளவு துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், தெருக்களில் குப்பை தொட்டிகளை வைக்க முடியாத நிலை உள்ளது,' என உபதலை கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. உபதலை ஊராட்சி சார்பில் சமுதாய கூட வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சிதம்பரம் முன்னிலை வகித்து பேசியதாவது; கிராமப்புறங்களில் குப்பைகள், கால்வாயில் கொட்டப்படுவதால் ஆங்காங்கே குப்பை தொட்டி வைத்து, ஊராட்சி சார்பில் குப்பைகளை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை மிக குறைவு; குப்பைகளை அள்ள வாகன வசதியும் இல்லை. இத்தகைய நிலையில் வீதி, தெருக்களில் குப்பைத் தொட்டிகளை வைத்து, அதில் சேரும் குப்பைகளை அகற்ற முடியாது; கால்வாய்களை பராமரிக்க வேண்டியது அப்பகுதி மக்களின் பொறுப்பு. இவ்வாறு, சிதம்பரம் பேசினார். ஊராட்சி உதவியாளர் சுகுமார், தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி உறுப்பினர்கள் மணி, ரகு, நிம்மி, நிர்மலா, குன்னூர் ஊராட்சி ஒன்றிய துணை பி.டி.ஓ., மரிய கொரட்டி, மண்டல தாசில்தார், வி.ஏ.ஓ., அமலா, மின்வாரிய உதவி பொறியாளர் நிர்மல் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.