| ADDED : ஜன 04, 2024 10:55 PM
கூடலுார்:கூடலுார் குடோன் அருகே, சுற்றுலா பயணிகள், சாலையோர வனத்தில் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளில் உணவு தேடி காட்டு யானைகள் வர துவங்கி உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூடலுாரில் வனத்தை ஒட்டிய சாலையோரங்களில் 'பிளாஸ்டிக்' கழிவுகள், குப்பைகளை பலரும் வீசி செல்வதால் வனச்சூழல் பாதிக்கப்படுவதுடன், அதில் உணவு தேடி வரும் வனவிலங்குகள், உணவுடன் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு வருகின்றன. இதனால், அவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.இதனால், 'வனத்தை ஒட்டிய சாலையோரங்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்ல வேண்டாம்,' என, வனத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும், கூடலுார் - கோழிக்கோடு சாலை வழியாக பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகள், எடுத்து வரும் உணவை, வனப்பகுதியை ஒட்டிய சாலையோரம் அமர்ந்து உண்ட பின், மீதமாகும் உணவு, பிளாஸ்டிக் கழிவுகள், காலி பாட்டில்களை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர்.அப்பகுதிகளில் சிறிய வனவிலங்குகள் உணவு தேடி வந்த நிலையில், தற்போது காட்டு யானைகளும் வர துவங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.