குன்னுாரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
குன்னுார், ;குன்னுார் வி.பி., தெரு, மவுண்ட் ரோடு பகுதிகளில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.குன்னுார் வி.பி., தெரு, மவுன்ட் ரோடு பகுதிகளில் சமீப காலமாக சாலையோரங்களில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, வாகனங்கள் செல்லவும் பொதுமக்கள் நடமாடவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சி கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் முறையிட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று, நகராட்சி கமிஷனர் இளம்பரிதி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. வி.பி., தெரு முன்பு, 2 கடைகள் அகற்றப்பட்டன. கடைகளின் முன்புறம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, காய்கறி, பெட்டிகள், தடுப்புகள் நகராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பு
வி.பி., தெரு 'பிக்-அப்' ஸ்டாண்ட் எதிர் புறம் உள்ள டீக்கடையை அகற்றிய சில நிமிடங்களில், மீண்டும் தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கடை வைத்ததாக மற்ற வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். அங்கு வந்த நகராட்சி கமிஷனர், ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.கமிஷனர் இளம்பரிதி கூறுகையில்,'' நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் எவ்வித பாரபட்சமின்றி அகற்றப்படும். விரைவில் துருவம்மன் கோவில் எதிர்புறம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். மவுண்ட் ரோடு கழிப்பிடம் அருகே உள்ள, ஆவின் பூத்தை அகற்ற ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். இந்நிலையில், நேற்று மாலை, சாலையோர வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.