கூடலுார்: கூடலுாரில் காபி பூ பூத்துள்ள நிலையில், கோடை மழை ஏமாற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்த படியாக, விவசாயிகள் காபி விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில், 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 'அரபிகா, ரோபஸ்டா' வகை என காபி பயிரிடப்பட்டுள்ளது.அதில், 11 ஆயிரம் ஏக்கர் ரோபஸ்டா காபியாகும். இங்கு ஆண்டுக்கு, சராசரியாக ரோபஸ்டா காபி 3,900 முதல் 4200 டன்; அரபிகா காபி, 600 முதல் 800 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. காபி அறுவடைக்குப் பின் ரோபஸ்டா காபி, பிப்., ஏப்., மாதத்திலும், அரபிகா மே மாதத்திலும் பூ பூக்கும். நல்ல மகசூல் கிடைக்க, காபி பூக்கும் போதும், பூத்த பின்பும், கோடை மழை அவசியம்.நடப்பு ஆண்டு, தற்போது, ரோபஸ்டா காபி பூ பூத்துள்ளது. ஆனால், கோடை மழை பெய்யாமல் ஏமாற்றி வருவதால், காபி மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காபி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'காபி பூ பூக்கும் போது, 25 மி.மீ., மழையும், ஒரு வார இடைவெளிக்குப்பின், 25 மி.மீ., மழையும் அவசியம். கூடலுார் பகுதியில், தற்போது காபி பூ பூத்துள்ள நிலையில், கோடை மழை ஏமாற்றி வருவதால், மகசூல் பாதிக்கும் சூழல் உள்ளது. இதனை தவிர்க்க, 'ஸ்பிரிங்ளர்' மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்,' என்றனர்.காபி விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழை ஏமாற்றி வருவதால்,தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சவும் வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, காபி விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்ய விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை இல்லாத காரணத்தால், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உள்ளது. கோடை மழை வரும் வரை, இப்பகுதியில் லாரிகளில் தண்ணீர் விநியோகிக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.