காலில் காயமடைந்த காட்டெருமை தேடும் பணியில் வனத்துறையினர்
குன்னுார்; குன்னுார் ஆரஞ்சு குரோவ் பகுதியில், காலில் காயம் அடைந்த நிலையில், ஒரு மாத காலமாக, நடமாடும் காட்டெருமைக்கு வனத்துறையினர் தேடி வருகின்றனர்.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டெருமைகள் வந்து செல்கின்றன.இந்நிலையில், குன்னுார் ஆரஞ்சு குரோவ் பகுதியில் காலில் காயமடைந்த நிலையில், காட்டெருமை மிகவும் சிரமத்துடன் நடமாடி வருகிறது.இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், கடந்த ஒரு மாத காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'வன துறையினருக்கு தகவல் தெரிந்தும், காலில் காயமடைந்து சிரமத்துடன் நடந்து செல்லும் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், வனத்துறை உயர் அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். இந்நிலையில், காட்டெருமைக்கு சிகிச்சை அளிக்க, வனத்துறையினர்; கால்நடை மருத்துவர்கள் நேற்று முதல் அதனை தேடி வருகின்றனர்.