ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
-நமது நிருபர் குழு-மேட்டுப்பாளையம், காரமடையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், அனுமன் ஜெயந்தி உற்சவ விழா நடந்தது.காரமடை அருகே குருந்தமலையில், குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், வீர ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. இங்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. துளசி மற்றும் பல்வேறு மலர்களால், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மருதூரில் அனுமந்தராய சுவாமி கோவிலில், வெண்ணெய் மற்றும் திராட்சை, முந்திரி, பாதாம், செர்ரி, பேரிச்சை, ஏலக்காய் அலங்காரத்தில், ஜெயமங்கள ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில், தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டியில், வரத ஆஞ்சநேயர் சுவாமிக்கு பல்வேறு பழங்களைக் கொண்டு சுதர்சன சக்கரத்தில், பழக்காப்பு அலங்காரம் செய்தனர். பின்பு ஆஞ்சநேய மூல ஹோமம், விசேஷத் திருமஞ்சனம், சகஸ்ர நாம அர்ச்சனை ஆகியவை செய்யப்பட்டன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாசன் ரிஷி பட்டர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். சூலூர்
சூலூர் அடுத்த கரவளி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா மற்றும் ஏழாம் ஆண்டு விழா நடந்தது.காலை, 8:00 மணிக்கு, ஸ்ரீ ஹரி வாயு ஸ்துதி ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது. 12:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை முடிந்து முத்தங்கி அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.இதேபோல், பெரிய குயிலி ஸ்ரீ கீதா பஜன் ஆஞ்சநேயர் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி விழா நடந்தது. நாம சங்கீர்த்தனத்துடன், பஜனை பாடி பக்தர்கள் வழிபட்டனர். கள்ளப்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் உள்ள ரகுவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். துடியலுார்
துடியலூரில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை அபிஷேக ஆராதனைகள், அன்னதானம், பஜனை, பக்தி சொற்பொழிவு, வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் பாலகிருஷ்ணா கல்யாண மண்டபம் ரோடு, ஆதிநாராயண பெருமாள் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ராம பக்த ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதே போல, பல்வேறு பெருமாள் கோவில்களில் உள்ள அனுமன் சன்னதியில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. அன்னுார்
அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதியில், நேற்று முன்தினம் மாலை விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதையடுத்து அபிஷேகம் செய்யப்பட்டு, சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1008 வடைகள் உடன் மாலை அணிவிக்கப்பட்டது.கோவில் உட்பிரகாரத்தில் அனுமர் உலா வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கஞ்சப்பள்ளியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான வீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று காலை நடந்தது.ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடந்தது. தீபாராதனை நடந்தது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.