ஊட்டி: நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆங்காங்கே மரங்கள் விழுந்ததாலும், வெள்ளத்தில் தரைபாலம் மூழ்கியதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.நீலகிரி மாவட்டத்தில் நேற்று( ஜூலை 15) முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியது.மஞ்சூர் கிண்ணக்கொரை சாலை அப்பர் பவானி, அவலாஞ்சி, இத்தலார் என, மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் ராட்சத மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலை துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று பவர் ஷா உதவியுடன் மரங்களை அறுத்து அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தி வருகின்றனர்.அணைகளில் நீர்மட்டம் உயர்கிறது
மழை காரணமாக, அணைகளில் தண்ணீர் வரத்துக்கு முக்கிய நீரோடைகளான அப்பர் பவானி, காட்டு குப்பை, போர்த்திஹாபா, கட் லாடா, ஒசஹட்டி, தங்காடு தோட்டம், பிக்குலி உள்ளிட்ட நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இன்று காலை 8:00 மணி நிலவரப்படி அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை, பைக்காரா, போர்த்தி மந்து உள்ளிட்ட அணைகளுக்கு வினாடிக்கு, 250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பொழிவு இல்லாமல் அணைகள் அதல பாதாளத்திற்கு தண்ணீர் சென்ற நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் மின்வாரிய அதிகாரிகள் ஆறுதல் அடைந்துள்ளன.வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
மாயாறு ஆற்றில் ஏற்பட்ட, மழை வெள்ளத்தில், தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியதால், தெப்பக்காடு - மசினகுடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.சிரமத்தில் மக்கள்
கனமழை காரணமாக, தொரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளம், இருவயல் கிராமத்தை சூழ்ந்ததுள்ளது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.விடுமுறை
கன மழையை ஒட்டி இன்று நீலகிரியில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.Gallery
அவலாஞ்சியில் 37 செ.மீ., மழை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இன்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, அவலாஞ்சி, 37 செ.மீ., அப்பர்பவானி, 24.8 செ.மீ., எமரால்டு, 13.5 செ.மீ., மழை பெய்துள்ளது. கன மழை எதிரொலியாக அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் இன்று, நாளை இரண்டு நாட்கள் மூடப்பட்டுள்ளது.