லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகார் தரணும்: விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் லஞ்ச புகார்களை தயக்கமில்லாமல் தெரிவிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் அக்., 27-ம் தேதி முதல் நவ., 2-ம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் டி.எஸ்.பி., ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில், ஊட்டியில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழிப்புணர்வு நம் அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் நடந்தது. லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் எஸ்.ஐ., சக்தி முன்னிலை வகித்து பேசியதாவது, ''லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம். அதேபோல் லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். அரசு அலுவலகங்களுக்கு தங்களுடைய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள், அங்கு அலுவலர்கள் யாரேனும் லஞ்சம் கேட்டால் தயங்காமல் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு புகார் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.'' என்றார். இதை தொடர்ந்து ஊட்டி அரசு கலை கல்லூரி மாணவர் நடன நிகழ்ச்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் லஞ்சம் பற்றிய புகார்களை நேரிலோ அல்லது டி.எஸ்.பி., 9498147234, இன்ஸ்பெக்டர் 9498124373 மற்றும் அலுவலக தொலைபேசி எண் 0423-2443962 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.