பயனற்ற கழிப்பிடம் அகற்றினால் பார்க்கிங் தளம் அமைக்கலாம்
கோத்தகிரி; கோத்தகிரி ராம்சந்த் பகுதியில், பயனற்று கிடக்கும் கழிப்பிடம் மற்றும் கொட்டகையை அகற்றினால் பார்க்கிங் தளம் அமைக்கலாம். கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, ராம்சந்த் பகுதியில், அரசு அலுவலகங்கள், கடைகள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இப்பகுதி மக்கள் நலன் கருதி, 15 ஆண்டுகளுக்கு முன், கழிப்பிடம் கட்டப்பட்டது. அருகில், கடைகளும் கட்டப்பட்டன. போதிய பராமரிப்பு இல்லாத நிலையில், கழிப்பிடம் மற்றும் கொட்டகை 'ஷெட்' கடைகள் பராமரிப்பு இல்லாமல், காட்டு செடிகள் சூழ்ந்து, பயனற்று காணப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மக்கள் கூறுகையில், 'சாலை ஓரத்தில் பயனற்று கிடக்கும் இந்த கட்டடங்களை அகற்றும் பட்சத்தில், 'பார்க்கிங் ' தளம் அமைய வாய்ப்புள்ளது. மேலும், புதிய கடைகள் கட்டுவதன் மூலம், வாடகையாக நகராட்சிக்கு வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது,' என்றனர்.