ஊட்டி;'ஊட்டி ஸ்டோன் ஹவுஸ் அரசு அருங்காட்சியகம் பகுதியில், விடுதி கட்டுவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஆங்கிலேயர் ஜான் சல்லீவன், கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியை அடுத்து, ஊட்டியில் கட்டிய முதல் கட்டடம் 'ஸ்டோன் ஹவுஸ்' எனப்படும் கல்பங்களா ஆகும். இங்கு தங்கியபடி, நீலகிரி மாவட்டத்தை நிர்வகித்து வந்தார்.மேலும், ஊட்டி அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தின் மறு பகுதியில், அதே காலகட்டத்தில், 'கன்னிமரா காட்டேஜ்' ஒன்றை கட்டினார். அது தற்போது அரசு அருங்காட்சியகமாக உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள், ஊட்டியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முக்கிய இடமாக இருந்து வருகிறது. பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்க அறிவுரை
மாநில முதல்வர் ஸ்டாலின் கடந்த, 2022ல் ஊட்டி-200 விழாவை துவக்கி வைத்து பேசுகையில், 'மாவட்டத்திலுள்ள பாரம்பரிய கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவற்றின் அழகு பாதிக்காமல் இருக்க, அவற்றை சுற்றிய பகுதிகளில் வேறு கட்டுமானங்கள் கட்ட கூடாது; இத்தகைய கட்டுமானங்களை புனரமைக்க அரசு சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது,' என, தெரிவித்தார். இதை தொடர்ந்து, ஊட்டியில் சிதிலமடைந்து பராமரிப்பு இல்லாத பாரம்பரிய கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில், விசாலமான இடத்தில், மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வரும், அரசு அருங்காட்சியகம் மாவட்டத்தின் பாரம்பரிய நினைவு சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த கோடை சீசனின் போது கூட, இங்கு பல்லாயிரம் மக்கள் வந்து பார்வையிட்டனர். புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு
இந்த கட்டடத்தை மேலும் மெருகேற்ற வேண்டிய அரசு நிர்வாகம், மாறாக இந்த கட்டடத்தின் முன் உள்ள இடத்தில், மாணவர்களுக்கான விடுதி கட்டுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால், பாரம்பரியமான இக்கட்டடத்தின் பொலிவு கேள்வி குறியாகியுள்ளது. இதற்கு, ஊட்டியை சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில்,''ஊட்டி அரசு கலைக் கல்லுாரியில், 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 'ஒத்தைக்கால் மந்து' என்ற இந்த இடத்தில் இருந்துதான், ஊட்டி என்ற பெயர் உருவான வரலாறு உள்ளது. இங்கு ஊட்டியில் முதல் கட்டடமும் உள்ளது. பாரம்பரியமிக்க இந்த பகுதியில், வேறு கட்டுமானங்கள் வருவதை ஏற்க முடியாது.மாணவர்களுக்கு விடுதி தேவை என்பது மாற்று கருத்து கிடையாது. அதே நேரத்தில் இப்பகுதியில் விடுதி கட்டுவதை கைவிட்டு, வேறு இடத்திற்கு கட்டுமானத்தை மாற்ற வேண்டும். இது குறித்து, மாநில முதல்வர்; தலைமை செயலருக்கு, மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.