அதிகரிக்கும் பொக்லைன் பயன்பாடு: கரையும் மலை பகுதி
பந்தலுார்; பந்தலுார் அருகே எருமாடு மற்றும் அய்யன்கொல்லி சுற்று வட்டார பகுதிகளில், பொக்லைன் பயன்படுத்தி மலைகள் கரைந்து வருகின்றன.பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், வீடுகள் கட்ட தரைதளம் அமைப்பதற்கு பொக்லைன் பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி, எருமாடு மற்றும் அய்யன்கொல்லி சுற்றுவட்டார பகுதிகளில், இரவு நேரங்களில் தனி நபர்கள் பலர் மலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், பொக்லைன் பயன்படுத்தி மண் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நடக்கும் விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'நீலகிரியை ஒட்டிய வயநாடு பகுதியில், இதுபோல் மலை முகடுகளை கரைத்து கட்டுமானங்கள் ஏற்படுத்தியதால், பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டு பலர் பலியாகினர். இந்த பகுதியிலும் எந்தவித அனுமதியும் இல்லாமல் பொக்லைன் பயன்படுத்தி, சாலைகள் அமைப்பது மற்றும் மலைகளை சமன்படுத்தி கட்டுமானங்கள் ஏற்படுத்துவதால் மழை காலங்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி இன்றி பொக்லைன் பயன்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த இயலும்,' என்றனர்.வருவாய் ஆய்வாளர் கவுரி கூறுகையில்,'' கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், 10 வீடுகளுக்கு மட்டும், பொன்லைன் பயன்படுத்தி அடித்தளத்தை சமன் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதியை பயன்படுத்தி விதிமீறல்களில் ஈடுபட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.