| ADDED : ஜன 02, 2026 06:10 AM
பாலக்காடு: ''மேற்கத்திய தாக்கங்கள் நமது இசையில் செல்வாக்கு செலுத்துவது போல, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நம் இசை மற்றும் கலாசாரமும் பிரபலமடைந்து வருவதாக'' ஹாலிவுட் இசையமைப்பாளர் டொராண்டோ ஜெயதேவன் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், நடந்து வரும் நடன சங்கீத உற்சவத்தில் கலந்து கொள்ள வந்த, ஹாலிவுட் இசையமைப்பாளர் டொராண்டோ ஜெயதேவன் நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கத்திய தாக்கங்கள், நமது இசையில் செல்வாக்கு செலுத்துவது போல, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நம் இசை மற்றும் கலாசாரமும் பிரபலமடைந்து வருகிறது. கனடாவில், நம் நாட்டு நடனம் மற்றும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்நாட்டில், 200 நடனப் பள்ளிகள் உள்ளன. என்னுடைய பயிற்சியினர் கீழ், நுாறு பேர் வயலின் கற்று வருகிறார் கள். அங்கு வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மக்கள், தங்கள் கலாசாரத்தைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், கலை நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று கனடாவில் டொராண்டோ சிறந்த கலாசார நகரமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். குச்சிப்புடி நடன கலைஞர் அவிஜித்தாஸ் கூறுகையில், 'பாரம்பரியத்திற்கு உண்மையாக இருந்து, குச்சிப்புடி நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது' என்றார். இளம் பரதநாட்டியக் கலைஞர் கோபிகா கூறுகையில், 'கலையின் புகழ் குறைந்து வருவதற்கு காரணம், அதைப் போற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதே ஆகும்' என்றார்.