உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டிக்கு மாற்றப்பட்ட பூங்கா திட்டம் தேவாலாவுக்கு மீண்டும் வர வாய்ப்பு? கூடலுாரின் சுற்றுலாவை மேம்படுத்தினால் மக்களுக்கு பயன்

ஊட்டிக்கு மாற்றப்பட்ட பூங்கா திட்டம் தேவாலாவுக்கு மீண்டும் வர வாய்ப்பு? கூடலுாரின் சுற்றுலாவை மேம்படுத்தினால் மக்களுக்கு பயன்

கூடலுார்; மத்திய அரசு ஒதுக்கிய, 70 கோடி ரூபாய் நிதியில், கூடலுார் பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் மலர் தோட்டம் அமைக்க, மாநில அரசு மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கூடலுார் நாடுகாணி பொன்னுார் தோட்டக்கலை பண்ணையை சுற்றுலா தலமாக மாற்ற, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இரு ஆண்டுக்கு முன் இங்கு சுற்றுலா தலம் அமைக்க மாநில அரசு, 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. தொடர்ந்து, பணிகளை துவங்காததால் மக்கள் ஏமாற்றம் அடைந்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசு, கூடலுாரில், 'தேவாலா மலர் பூங்கா' அமைக்க, 70.23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளூர் மக்கள்

அதன்படி, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரை செய்ததன் அடிப்படையில், பொன்னுார் (தேவாலா) தோட்டக்கலை பண்ணையில், பூங்கா அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 'மக்களும் பண்ணையில் விரைவில் மலர் பூங்கா பணிகள் துவங்கப்படும்,' என, எதிர்பார்த்தனர்.இந்நிலையில், '45 ஆண்டுகளுக்கு மேலாக, 200 ஏக்கரில் தோட்டக்கலை நிர்வாகத்தின் கீழ், செயல்பட்டு வரும் பண்ணை பகுதி வருவாய் துறை பதிவேட்டில் 'காடு' என, இருப்பதால், வனத்துறையினர் தடையில்லா சான்று வழங்கவில்லை,' என கூறி, மலர் பூங்காவை, சேரம்பாடி அருகே அமைக்க, அதிகாரிகள் இடம் தேர்வு செய்தனர். இடம் மாற்றத்திற்கு, அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அந்த பூங்கா திட்டம், ஊட்டிக்கு மாற்றப்பட்டதாக திடீரென கூறப்பட்டதால், உள்ளூர் மக்கள் வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.பொதுமக்கள் கூறுகையில், 'மத்திய அரசு நிதி ஒதுக்கு முன்பே, இப்பகுதியை ஆய்வு செய்து அதிகாரிகள் பூங்கா அமைக்க, பரிந்துரை செய்த நிலையில், திடீரென இடத்தை மாற்றுவது ஏற்று கொள்ள முடியாது. சுற்றுலா பயணிகளின், தேவை மற்றும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஏற்கனவே தேர்வு செய்தபடி, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், பூங்காவை அமைக்க வேண்டும்,' என்றனர்.இந்நிலையில், 'மத்திய அரசு அறிவித்தது போல, கூடலுாரில், 70 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க, தற்போது மாநில அரசு உறுதி அளித்துள்ளது,' என, எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் கூறி உள்ளார்.உள்ளூர் வியாபாரிகள் கூறுகையில்,' கூடலுாரில், 70 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா வந்தால், இப்பகுதியை சேர்ந்த, 200 வியாபாரிகள், அவர்களை சார்ந்த குடும்பங்கள் பயன் பெற வாய்ப்பு ஏற்படும். இது தொடர்பாக ஏற்கனவே, வியாபாரிகள் போராட்டம் நடத்தி, முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளோம். மாநில அரசு கூடலுாரில் பூங்கா அமைத்தால் இங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை