| ADDED : ஜன 23, 2024 01:11 AM
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி அதிகளவில் சில்வர் ஓக் மரங்கள் வெட்டி கட்டத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேயிலை தோட்டம் நடுவே நிழலுக்காக 'சில்வர் ஓக்' மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.முதிர்ந்த அல்லது இடையூறாக உள்ள 'சில்வர் ஓக்' மரங்களை அகற்ற சம்மந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்கள் வனத்துறை அனுமதி பெற்ற பின் தான் அகற்ற வேண்டும்.சமீப காலமாக எங்கு பார்த்தாலும் 'சில்வர் ஓக்' மரங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில ஒப்பந்ததாரர்கள் சொற்ப 'பெர்மிட்களை' வாங்கி கொண்டு, அதிகளவில் மரங்கள் வெட்டி செல்வது அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும், பல்லாயிரம் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.'வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் நீலகிரியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு நள்ளிரவில் லாரி லாரியாக செல்கிறது. இது குறித்து சோதனை செய்ய வேண்டிய வனத்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை,' என, புகார் எழுந்துள்ளது.மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''சில்வர் ஓக்' மரங்களுக்கு உரிய 'பெர்மிட்' வாங்கிய பின் தான் மரங்களை அகற்ற வேண்டும். பெர்மிட் அளவை தாண்டி விதி மீறலுடன் மரங்கள் கடத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.