உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண் உடலை டிராக்டரில் அனுப்பிய நிர்வாகம் தொழிலாளர் நலத்துறையிடம் புகார்

பெண் உடலை டிராக்டரில் அனுப்பிய நிர்வாகம் தொழிலாளர் நலத்துறையிடம் புகார்

பந்தலுார்,; பந்துலுார் அருகே இறந்த பெண் தொழிலாளியின் உடலை ஆம்புலன்சில் அனுப்பாமல், டிராக்டரில் அனுப்பிய சம்பவம் குறித்து தொழிலாளர் நலத்துறைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே அத்திகுன்னா, அத்திமாநகர் பகுதியை சேர்ந்த ஒருவர், இங்குள்ள தனியார் எஸ்டேட்டில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி சுந்தரி. உடல் நலக்குறைவால் தனியார் எஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.இவரது உடலை ஆம்புலன்ஸ் அல்லது வேறு வாகனங்களில் அனுப்புவதற்கு பதில், கடுமையான குளிரில் எஸ்டேட் மருத்துவமனை நிர்வாகம், எஸ்டேட்டிற்கு சொந்தமான டிராக்டரில் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் 'வீடியோ' மற்றும் 'போட்டோ' எடுத்து, தொழிலாளர் நலத்துறை மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சமூக ஆர்வலர் சுப்ரமணி கூறுகையில்,'' இது போன்ற சம்பவம் நடக்கும் நேரங்களில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டால், எஸ்டேட் நிர்வாகம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதால், எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர்.எனவே, மருத்துவமனை நிர்வாகம் இது போல் நடந்து கொண்டது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற நிலை தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.ஆர்.டி.ஓ., செந்தில்குமார் கூறுகையில்,'' இது குறித்த புகார் வந்துள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை