உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நவம்பர் நடுக்கம்! குன்னுார் மக்களின் நினைவில் நின்ற மழைக்கால பாதிப்பு; 154 பேரிடர் பகுதிகளில் 20 மண்டல குழுவினர் அலர்ட்

நவம்பர் நடுக்கம்! குன்னுார் மக்களின் நினைவில் நின்ற மழைக்கால பாதிப்பு; 154 பேரிடர் பகுதிகளில் 20 மண்டல குழுவினர் அலர்ட்

குன்னுார்; குன்னுாரில் நவ., மாதம் தொடரும்பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள, ஆண்டுதோறும் அனைத்து அரசு துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் நவ., மாதத்தில் பெய்து வரும் மழையால் அவ்வப்போது, பேரிடர் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இதுவரை நடந்த வரலாற்று பதிவுகளை வைத்து, அப்பகுதிகளில் உள்ள பேரிடர் அபாய இடங்களில், அரசு துறை குழுவினர் கண்காணிப்பு பணிகளை தொடர்கின்றனர்.

முக்கிய பேரிடர் சம்பவங்களின் விபரம்

*1905 அக், மாதம், 4ல் பெய்த மழையில், குன்னுார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில், பாலத்தின் பக்கவாட்டு பகுதி அடித்து சென்றது. ரயில் குடியிருப்பில் இருந்த ஊழியர் குடும்பத்தினர் ஜன்னல்களை உடைத்து காப்பாற்றப்பட்டுள்ளனர். வேறு இடத்தில் நடந்த மழைபாதிப்பில், 5 பேர் உயிரிழந்தனர்.* 1979 நவ.,13ல் கோடநாட்டில், 16.99 செ.மீ., குன்னுாரில் 14.94 செ.மீ., மழை பதிவானது. 16ல் குன்னூரில் ஒரு பெண் உட்பட இரு குழந்தைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். 19ல், சேலாஸ் பகுதியில் ஒரு கி.மீ., நீளத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது; 250 சதுர கி.மீ. பரப்பளவில் சொத்துக்கள், உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. *1990 அக்., 25ல், ஒரே இரவில் கேத்தியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட நிலச்சரியில், 35 குடும்பங்கள் உயிருடன் புதையுண்டன.*1993 நவ., 11ல் மேட்டுப்பாளையம் சாலை மரப்பாலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில், 18 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு சாலை அடித்து செல்லப்பட்டது; 12 பேர் உயிரிழந்தனர்; இரு பஸ்கள் பயணிகளுடன் அடித்து செல்லப்பட்டது. 15 பேர் காணாமல் போயிருந்தனர்; 15 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.*2006ல் பர்லியார் மலை ரயில் பாதையில், 28 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. * 2009 நவ, 8 முதல் 15ம் தேதி வரை சிறிய, பெரிய அளவில், 1,150 நிலச்சரிவுகள் பதிவாகின. 48 உயிர்கள் பலியாகின. வீடுகள், சாலைகள் ரயில் பாதைகளில் சேதம் ஏற்பட்டது. அரசு மதிப்பின்படி, 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.* 2015 மார்ச், 8ல், கிருஷ்ணாபுரம் ஆற்றோர சாலையில் நிறுத்தப்பட்டிருந்த, 6 கார்கள் 8 ஆட்டோக்கள், 10 பைக்குகள் உட்பட, 30 வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. ஆழ்வார் பேட்டையில் வீட்டில் தண்ணீரில் சிக்கிய, 4 பேர் மீட்கப்பட்டனர்.*2019 நவ., 16ல் இரவில் கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பைக் கார் என, 19 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. 14 செ.மீ., மழையளவு பதிவானது. 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. ஆய்வாளர்களின் ஆய்வின்படி, '1978ம் ஆண்டிற்கு பிறகு பேரழிவுகள் அதிகரித்துள்ளது. 1993ல் இருந்து 2009 வரை சராசரி நிலச்சரிவுகளில், 100 மீட்டர் நீளம் மற்றும் 150 மீட்டர் அகலம் என்ற அளவில், 3 மில்லியன் டன் மண் மற்றும் பாறைகள் இடம் பெயர்ந்தது,' என, மதிப்பிட்டுள்ளனர். இதனை வைத்து அரசு பல்வேறு பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது.

நடப்பாண்டில் கண்காணிப்பு தீவிரம்...!

குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''குன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தற்போது, 154 இடங்கள் பேரிடர் பகுதிகளாக உள்ளதால், பாதுகாப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 20 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி, அனைத்து உள்ளாட்சி நிர்வாகத்தினரும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான மீட்பு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளது. மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க, குன்னுார் கோத்தகிரியில் தலா, 105 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.பேரிடர்களை உடனுக்குடன் தகவல் தெரிவிக்க, குன்னுாரில், 700 பேர், கோத்தகிரியில், 50 பேர் என முதல் தகவல் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் முதல் தகவலை தொடர்ந்து உடனடியாக அந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். மழை பாதிப்பு குறித்த தகவலை, இலவச தொலைபேசி எண்-1077ல் மக்கள் அளிக்கலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundaran manogaran
நவ 16, 2024 22:50

பேரிடருக்கு இலக்காகும் இடங்கள் என்று கண்டறியப்பட்ட இடங்களில் கட்டுமானப் பணிகளுக்கு எப்படி அனுமதி வழங்கப்படுகிறது.அங்கெல்லாம் கட்டுமானங்கள் தொடர்ந்து நடைபெறுவது எப்படி? அரசியல் வாதிகள் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் விடுவது எப்படி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை