| ADDED : பிப் 16, 2024 12:18 AM
ஊட்டி:நீலகிரியில் கால்நடைகளுக்கு மூன்றாம் சுற்று கன்று வீச்சு தடுப்பூசி முகாமில் நடக்கிறது.கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் வாயிலாக அனைத்து கிராமங்களிலும், வரும், 15ம் தேதிமுதல், அடுத்த மாதம், 15ம் தேதி வரை, மூன்றாம் சுற்று 'கன்று வீச்சு நோய்' தடுப்பூசி முகாம் நடக்கிறது. 'புருசெல்லோசிஸ்' எனப்படும் கன்று வீச்சு நோய், பசு மற்றும் எருமைகளுக்கு, கரு சிதைவு மற்றும் மலட்டு தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சல், சினை ஈன்றும் தருவாயில் கரு சிதைவு ஏற்படுகிறது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக, மூன்றாவது சுற்று நோய்க்கான தடுப்பூசி, நான்கு மாதம் முதல், 8 மாதம் வயதுடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் இலவசமாக செலுத்தப்படுகிறது.இந்த தடுப்பூசியை, ஒரு முறை செலுத்தினால், கிடாரி கன்றுக்கு ஆயுள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. எனவே, கால்நடை வளர்ப்போர், தங்களுடைய கால்நடைகளுக்கு தடுப்பூசியை தவறாமல் செலுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.