ஊட்டி சூட்டிங் மட்டம் பகுதியில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் குவியல்! அதிர்ச்சி அடைந்த சூழல் சுற்றுலா குழுவினர்
ஊட்டி : ஊட்டி சூட்டிங் மட்டத்தில் சேகரிக்கப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்களால், சூழல் சுற்றுலா குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மறு சூழற்சி செய்ய முடியாத, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரு லிட்டர் 'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்கள்; பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் சோதனை
கலெக்டர் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டத்திற்கு நுழையும் அனைத்து அரசு, தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் வகையில், சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் பயணிகள்
'மாவட்டத்திற்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் கொண்டு வர வேண்டாம்,' என, சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், சுற்றுலா பஸ் மற்றும் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் விதிகளை மீறி மறைத்து பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருகின்றனர் இந்நிலையில், ஊட்டி அருகே பகல்கோடு மந்து பகுதியில் உள்ள சூட்டிங் மட்டம் பகுதியில், மாவட்ட நிர்வாகத்தால், அமைக்கப்பட்ட சூழல் சுற்றுலா குழுவினர், அப்பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுலா பயணியர் கொண்டு வந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வரப்பட்ட உணவு பொருள்கள் பல இடங்களிலும் காணப்பட்டன. இதனை சேகரித்த குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வரும் போது, பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனினும், எங்களுக்கு தெரியாமல் சூட்டிங் மட்டம் பகுதிக்கு பலர் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்கின்றனர். இதனை வீசி செல்வதால், வன உரியினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் உணருவதில்லை. வரும் நாட்களில் அவர்களின் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதி சூழ்ந்த இப்பகுதியை துாய்மையாக வைக்க, சுற்றுலா பயணிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.