மாவனல்லா பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலி அகற்றம்
கூடலுார்,; முதுமலை, மசினகுடி மாவனல்லா பகுதியில், அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலி அகற்றப்பட்டது.முதுமலை, மசினகுடி கோட்டம் வனவிலங்குகளின் வாழ்விடம் மட்டுமின்றி, மேய்ச்சல் பகுதியாக உள்ளது. வனவிலங்குகள் குறிப்பாக, யானைகள் உணவு, குடிநீர் தேவைக்காக முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மற்றும் நீலகிரி வனக்கோட்டங்கள் இடையே இடம் பெயர்ந்து செல்லும் முக்கிய வழிதடமாக உள்ளது.இதனால், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அனுமதி இன்றியும் மின்வேலி அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவனல்லா பகுதியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில், மசினகுடி - கல்லட்டி சாலையை ஒட்டி சில தினங்களுக்கு முன் மின்வேலி அமைக்கப்பட்டது. முறையான, அனுமதி இன்றி, மின்வேலி அமைக்கப்பட்டது குறித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான, படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. தொடர்ந்து, நேற்று முன்தினம், சிங்கார வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஆய்வில், அனுமதி இன்றி, மின்வேலி அமைத்தது தெரியவந்தது. அவைகளை, அற்ற வனத்துறையினர் உத்தரவிட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் முன்னிலையில், மின்வேலி அகற்றப்பட்டது.மீண்டும், 'இப்பகுதியில் மின்வேலி அமைக்கப்பட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும,' என, வனத்துறை தெரிவித்தனர்.வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ' இப்பகுதியில் சாலையை ஒட்டிய தனியார் இடத்தில், அனுமதியின்றி, மின்வேலி அமைக்கப்பட்டது, இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.