ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணி
கோத்தகிரி: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. கோத்தகிரி -மேட்டுப்பாளையம் இடையே, கொண்டை ஊசி வளைவுகள் குறைந்துள்ளதாலும், சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளதாலும், சுற்றுலா வாகனங்கள் உட்பட, அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வருகின்றன. கோடை சீசன் நாட்களில், இச்சாலை ஒருவழி பாதியாக மாற்றப்படுகிறது. சாலை, சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து நேரமும் குறையும் என்பதால், டிரைவர்கள் இந்த சாலியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். சாலையில் ஒரு சில இடங்களில் வளைவுகள் விரிவு படுத்தாமல் இருந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில், 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விரிப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக, மேல் தட்டப்பள்ளம் பகுதியில், சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5 மீட்டர் உயரத்திலும், 54 மீட்டர் நீளத்திற்கு, சாலை மேம்படுத்து பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவடையும் பட்சத்தில், இப்பகுதியில், வாகன நெரிசல் தவிர்க்கப்படுவதுடன், ஒரே நேரத்தில், இரு கனரக வாகனங்கள் ஒருங்கே சென்றுவர வழி வகை ஏற்பட வாய்ப்புள்ளது. பணியை கோடைசீசனுக்குள் முடித்தால் பெரும் பயன் ஏற்பட வாய்ப்புள்ளது.