பழங்குடியின மாணவர்களுக்கு இருக்கை வசதிகள் தினமலர் செய்தி எதிரொலி
பந்தலூர்: பந்தலூர் அருகே பென்னை அரசு துவக்க பள்ளியில், மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, பென்னை பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு 35 மாணவர்களுடன் நல்ல நிலையில் செயல்பட்ட வந்த பள்ளி, கடந்த ஜூன் மாதத்தில் திடீரென மூடப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, கடந்த மாதம் 8-ம் தேதி மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே பயன்படுத்தி வந்த தளவாட பொருட்கள், இல்லாத நிலையில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டது. ஆசிரியர்களுக்கும் இருக்கை வசதி இல்லாத நிலையில், தரையில் அமர்ந்து கல்வி போதித்து வந்தனர். இதுகுறித்து தினமலரில் கடந்த 26 ஆம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மாணவர்கள் பயன்படுத்த 7 பெஞ்சுகள், 2- நாற்காலிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் பத்மநாபன், சுந்தரன், ஹனிபா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.