உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்ட குழாய்கள் காட்சி பொருள்!  குடிநீருக்காக தவம் கிடக்கும் பழங்குடிகள்

 மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்ட குழாய்கள் காட்சி பொருள்!  குடிநீருக்காக தவம் கிடக்கும் பழங்குடிகள்

பந்தலுார், : கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும், 'ஜல்ஜீவன்' குடிநீர் திட்டம் முழுமை பெறாத நிலையில், பழங்குடி கிராமத்தில் குழாய்கள் காட்சி பொருளாக மாறி உள்ளன.கிராமப்புற மக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், மத்திய அரசு சார்பில் ஜல்ஜீவன் திட்டம் கொண்டுவரப்பட்டு, நாடு முழுவதும் ஊராட்சிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் நெலக்கோட்டை ஊராட்சி பகுதிகளில், இந்த திட்டத்தின் கீழ் வெறும் குழாய்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்திற்கான குடிநீர் ஆதாரங்களை செயல்படுத்தாமல், தரமற்ற குடிநீர் குழாய்கள் மூலம் பெயரளவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தண்ணீருக்கு பதில் வெறும் காற்று...

அதில், பெரும்பாலான பழங்குடியின கிராமங்களில், குழாய்களை பொருத்தி பல மாதங்கள் கடந்தும் தண்ணீருக்கு பதில் வெறும் காற்று மட்டுமே வருகிறது. --அதில், நெலக்கோட்டை ஊராட்சியில் அயனிபிறா மற்றும் செவிடன்கொல்லி பழங்குடியினர் கிராமங்களில், ஒவ்வொரு வீடுகளுக்கு முன்பாகவும் குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளது. குழாயில் தண்ணீர் வரும் என்று காத்திருந்த பழங்குடியின மக்களுக்கு இதுவரை ஏமாற்றம் மிஞ்சி உள்ளது. இந்த திட்டம் மட்டும் இன்றி, கிராமத்தை ஒட்டி குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் பொருத்தாமலும் குழாய் இணைப்பை முழுமை படுத்தாமலும் வேறு குடிநீர் திட்டமும் பெயரளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பழங்குடியின மக்கள் பழங்காலங்களை போல், 60 அடி ஆழமுள்ள கிணறுகளில் இருந்து, தண்ணீரை எடுத்து தலைசுமையாக தூக்கி செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.

முழுமையான ஆய்வு அவசியம்

பந்தலுார் வெள்ளேரி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில்,''ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, மத்திய அரசு அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் உண்மை நிலையை அறிய முடியும். மேலும், திட்டத்தை முழுமைப்படுத்தவும், திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, பழங்குடியினர் நல அமைப்புகள் சார்பில் பிரதமர் அலுவலகம், மாநில முதல்வர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பி உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை