வெப்பத்தின் தாக்கம் அதிகம்; தலையில் குடை சூடிய தொழிலாளர்
பந்தலுார் : பந்தலுார் பகுதியில் மழையுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தலையில் குடை சூடி தொழிலாளர்கள் இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்மேற்கு பருவமழையின் தாக்கம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது, மாலை நேரத்தில் மட்டுமே லேசாக தலைகாட்டும் மழை; மற்ற நேரங்களில் கடும் வெயில் என காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.இரவில் சமவெளி பகுதிகளை போல் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதால், ஏசி மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்தி உறங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால், பெண் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள, தலையில், சிறிய குடைகளை சூடி இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, சோர்வடையாமல் பணி மேற்கொள்கின்றனர். இவர்கள் பணி செய்யும் காட்சி பயணிகளை கவர்ந்து வருகிறது.