கொல்லிமலைக்கு இயங்கும் மினி பஸ் முறையாக இயக்கப்படாததால் அவதி
குன்னுார்; எல்லநள்ளியில் இருந்து கொல்லிமலை வழித்தடத்தில் இயக்கும் மினி பஸ் உரிய முறையில் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.குன்னுார் கொல்லிமலை, சிவ செந்துாரன் நகர் உட்பட சுற்றுப்புற பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பெரும்பாலான நேரங்களில், சிவ செந்துாரன் நகரில் நிறுத்தாமல், பயணிகளை நீண்ட தொலைவில் சென்று இறக்கி விடுகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி, பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில், கேத்தி பாலாடா வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் கூறுகையில், 'சிவ செந்துாரன் நகரில் மினி பஸ் நிறுத்த முடியாது என சில கண்டக்டர்கள் கூறி வெகு தொலைவில் சென்று நிறுத்துகின்றனர். பயணிகள் குறைவாக இருந்தால் கேத்தி பாலாடா வரை மட்டுமே வருகின்றனர். இதனால், கொல்லிமலை மற்றும் சிவ செந்துாரன் நகர் மக்கள் நடந்து செல்ல வேண்டி உள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.