சேரம்பாடி சப்பந்தோடு பழங்குடியின கிராமத்தில் கிணற்றை காணவில்லை! மோட்டார் அறை மட்டும் அமைத்தால் குடிநீர் வருமா?
பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி, சப்பந்தோடு பழங்குடியின கிராமத்தில் நடந்த குடிநீர் திட்ட பணியில், கிணறு தோண்டாமல், தொட்டி கட்டப்பட்டு மோட்டார் அறை அமைத்து, மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பந்தலுார் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சப்பந்தோடு பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 12 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிணறு அமைக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. புதிய குடிநீர் திட்டம்
இதனால், கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், ஊராட்சி மூலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், குடிநீர் தேக்க தொட்டி மற்றும் மோட்டார் அறை அமைத்து தொட்டியில் இருந்து கிராமத்திற்கு மட்டும் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் கிணறு அமைக்காமல், இந்த திட்டத்தை அதிகாரிகள் செயல்படுத்தி உள்ளனர். மேலும், மோட்டார் இல்லாத அறைக்கு மின் இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது. பழங்குடியின மக்களை ஏமாற்றும் வகையில், அரசு துறை அதிகாரிகள் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தியது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கிணற்றை காணவில்லை
கிராம மக்கள் கூறுகையில், 'இங்கு ஏற்கனவே உள்ள கிணற்றில் மழை காலத்திலும் தண்ணீர் இல்லாமல் உள்ளதால், புதிய குடிநீர் திட்டம் கோரி விண்ணப்பித்தோம். அதற்காக குடிநீர் தொட்டி மற்றும் மோட்டார் அறை அமைத்து மின் இணைப்பு வழங்கி உள்ளனர். ஆனால், குடிநீர் வழங்க கிணறு அமைக்காத நிலையில், எதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தினர் என்றே தெரியவில்லை. நாங்களும் இந்த பகுதியில், அரசு அமைத்த கிணற்றை தேடி அலுத்து விட்டோம். 'கிணற்றை காணவில்லை; கண்டுபிடித்து தாருங்கள்,' என, கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம்,' என்றனர். விசாசரணை நடத்த வேண்டும்
நீலகிரி பண்டைய பழங்குடி அமைப்பின் நிர்வாகி நீலகண்டன் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, அரசு அதிகாரிகளால் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு, இந்த கிராமம் சிறந்த உதாரணம். மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமத்துக்கு உடனே கிணறு அமைக்க வேண்டும்,'' என்றார்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில், ''இது குறித்து நேரில் ஆய்வு செய்து, இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும். கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.