உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாவட்டத்தில் தொடரும் மழை பொழிவால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு! மின் உற்பத்தி; கூட்டு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்காது

மாவட்டத்தில் தொடரும் மழை பொழிவால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு! மின் உற்பத்தி; கூட்டு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்காது

ஊட்டி; நீலகிரி அணைகளில், 85 சதவீதம் தண்ணீர் இருப்பில் இருப்பதால் மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் திட்ட பணிகள் சிக்கல் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் ஏப்., மாதம் நிலவரப்படி, இங்குள்ள அணைகளில், 30 சதவீதம் அளவில் தண்ணீர் இருப்பில் இருந்தது. கடந்த மாதத்தில் இரு வாரங்கள் மழை பெய்தது. மழையால், நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணைகளில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது. 30 சதவீதமாக இருந்த தண்ணீர் இருப்பு தற்போது, 70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அணைகளில் வெள்ளம்

இந்நிலையில், இம்மாதமும் மழை தொடர்ந்ததால், கடந்த, 14 மற்றும் 15ம் தேதிகளில் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டது. நேற்று 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக ஊட்டி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான அப்பர் பவானி அவலாஞ்சி பைக்காரா, பார்சன்ஸ் வேலி உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்ச மழை பெய்தது. கடந்த ஒரு மாதம் நிலவரப்படி அவலாஞ்சியில் அதிகபட்சம், 150 செ,மீ; அப்பர் பவானியில், 100 செமீ., மழை பதிவாகியுள்ளது. தொடரும் மழையால், அணைகளுக்கு விநாடிக்கு, 200 முதல் 300 கனஅடி வரை தண்ணீர் வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா, குந்தா, கெத்தை, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பெரும்பாலான அணைகளில், 85 சதவீத தண்ணீர் இருப்பில் உள்ளது. குந்தா அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, எந்த நேரத்திலும் திறக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளனர்.

மின் உற்பத்தி

மாவட்டத்தில் பரவலாக மழைப்பொழிவு இருப்பதால் மின் உற்பத்திக்கு பயன்படும் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இருப்பு அதிகரித்து வருகிறது. 2 மின் வட்டத்தில், 32 பிரிவு களில், 28 பிரிவுகளில் தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 833.65 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட, 12 மின் நிலையங்களில், 600 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டில் தென் மேற்கு பருவ மழை முன்கூட்டியே பெய்தது. சில நாட்கள் மழை தொடர்ந்ததை அடுத்து அணைகளில், 85 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது. நடப்பாண்டு இறுதி வரை மின் உற்பத்தி தடையின்றி மேற்கொள்ள முடியும்,'என்றனர்.

மழையால் நிரம்பி வழியும் பில்லுார் அணை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடரும் மழையால், நீலகிரி அணைகள் நிரம்பி திறக்கப்படும் உபரி நீர் பில்லுார் அணையில் சேகரமாகி பின் மதகுகள் வழியாக பவானி அணைக்கு செல்கிறது. பில்லுார் அணை நிரம்பி வழிவதால், அணையில் இருந்து கோவைக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்டத்தில் தேவைக்கேற்ப தண்ணீர் உள்ளது. இதனால், இனிவரும் சில மாதங்கள் கோவை மக்களுக்கு தண்ணீர் வினியோகத்தில் எவ்வித பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !