அம்பலமூலாவில் கால்பந்து போட்டி; வெற்றி பெற்ற வயநாடு அணி
பந்தலுார்; பந்தலுார் அருகே அம்பலமூலா பகுதியில் செயல்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிட பள்ளி சார்பில், போதை விழிப்புணர்வு கால்பந்து போட்டி நடந்தது. 'கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கால்பந்து அகாடமி அணி வீரர்கள்,' என, 14- வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த, 11 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா துவக்கி வைத்தார். அதில், விளையாடிய மாணவர்கள், தங்கள் திறமையை வெளிக்காட்டியது கால்பந்து ரசிகர்களையும், ஆசிரியர்களையும் கவர்ந்தது. இறுதி போட்டியில் வயநாடு பள்ளி அணியும், எருமாடு பகுதியை சேர்ந்த நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி அணியும் மோதியதில், வயநாடு அணி வெற்றி பெற்றது. 'வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, பள்ளி ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் செண்பகம், உடற்கல்வி ஆசிரியர் பைஜூ ஆகியோர் தலைமையிலான ஆசிரியர்கள் மற்றும் பங்கேற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.