உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் அருகே பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானை

கூடலுார் அருகே பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானை

கூடலுார்; கூடலுார் அருகே, பகலில் ஊருக்குள் முகாமிடும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலூர் பகுதியில் வனத்தை ஒட்டிய கிராமங்களில், இரவு நேரங்களில் காட்டு யானைகள் உணவு தேடி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், சில காட்டு யானைகள், இரவு மட்டுமின்றி பகலிலும் ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில், கூடலுார் நம்பாலக்கோட்டை பகுதியில், மக்னா யானை முகாமிட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். வனவர் வீரமணி தலைமையில் வன ஊழியர்கள், அப்பகுதியினர் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற யானை, திடீரென திரும்பி அவர்களை விரட்டியது. வன ஊழியர்கள் ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து போராடி யானையை விரட்டினர்.யானை, தேவர்சோலை சாலை கடந்து, தனியார் தேயிலை தோட்டம் வழியாக வனப் பகுதிக்கு சென்றது. வன ஊழியர்கள் அதனை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மக்கள் கூறுகையில், 'இரவில் ஊருக்குள் வந்து சென்ற காட்டு யானைகள், தற்போது பகலில் வர துவங்கியுள்ளது. எனவே, யானை ஊருக்குள் நுழைவதை தடுத்து, அதனை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !