இலவச வீட்டு மனை பட்டா பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
குன்னுார்; குன்னுார் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்கள் உள்ளன.இப்பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா கோரி, கடந்த பல ஆண்டுளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, நீலகிரியின் கலெக்டராக இருந்த ராஜ்குமார், இப்பகுதியில் நேரடியாக பார்வையிட்டு ஆறாவது மைல் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், இந்த இடத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து, மர கன்றுகளை நடவு செய்து விட்டனர்.எனினும், இலவச பட்டா கோரி இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் தீர்வு கிடைக்காமல் உள்ளது. பலமுறை அதிகாரிகளுக்கு புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த பாலன் கூறுகையில், ''அதிகரட்டி கிராமத்தில், பல ஆண்டுகளாக தினக் கூலி வேலை செய்து வருகிறோம். இதுவரை சொந்த வீடோ, நிலமோ கிடையாது. கடந்த,1990ல் இருந்து இலவச வீட்டுமனைபட்டா வழங்க கோரியும், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. ஜாதி சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அனைத்து விபரங்களும் தாசில்தாரிடம் வழங்கப்பட்டு உள்ளது. இலவச வீட்டு மனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு வழங்க கோரி, மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஊட்டிக்கு வரும் முதல்வர் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.