வயது முதிர்ந்த மூங்கில்களை வெட்டும் பணி துவக்கம்- முதற்கட்டமாக 50 ஏக்கர் பரப்பில் அகற்றம்
பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி தனியார் எஸ்டேட் வனப்பகுதியில் வயது முதிர்ந்த மூங்கில்களை வெட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது. கூடலுார் வனக்கோட்டத்தில் அதிக அளவில் யானைகள் உள்ள நிலையில், இவற்றின் விருப்ப உணவாக மூங்கில் தளிர்கள் மற்றும் மூங்கில் குருத்து காணப்படுகிறது. அதில், பெரும்பாலான வனப்பகுதிகளில், மூங்கில் வயது முதிர்ந்து பூக்கள் பூத்து அரிசியை உதிர்த்தவுடன், காய்ந்து போனது. இதனால், வனப்பகுதிகளில் மூங்கில்களை, மறு நடவு செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது.தற்போது, ஒவ்வொரு வனச்சரங்களிலும், வனப்பகுதிகளில் உள்ள உண்ணி செடிகள் அகற்றப்பட்டு, அங்கு மூங்கில் விதைகள் விதைக்கப்படுகிறது. இந்நிலையில், சேரம்பாடி தனியார் வனப்பகுதியில், வயது முதிர்ந்த மூங்கில்களை வெட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது. வயது முதிர்ந்த மூங்கில்களை அகற்றுவதற்கு, மாநில மலைப்பகுதி மரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். அதில், 'ஒவ்வொரு மூங்கில் தொகுப்பிலும், முதிர்ந்த நிலையில் உள்ள ஆறு மூங்கில்களை மறு உற்பத்திக்கு விட்டு, மீதமுள்ள மூங்கில்களை, ஒரு அடி உயரம் விட்டு வெட்ட வேண்டும். மூங்கில் வெட்டும் பகுதியில் வேறு இன செடிகளை நடவு செய்யக்கூடாது,' எனவும் விதிகள் உளளது. வனச்சரகர் அய்யனார் கூறுகையில், '' வனத்தில் வயது முதிர்ந்த மூங்கில்களை மட்டும், அகற்றினால் மூங்கில் காய்ந்து அழிவது தடுக்கப்பட்டு, யானைகளுக்கு தேவையான உணவுக்கு மறு உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும். தற்போது, வனத்துறையின் நேரடி கண்காணிப்பில், விதிமுறைகளுக்கு உட்பட்டு வயது முதிர்ந்த மூங்கில்கள் வெட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் இன்னும் மூன்று மாதங்களில், மூங்கில் கணுக்களில் மறு உற்பத்தி துவங்கி, யானைகளுக்கு தேவையான உணவு கிடைக்கும்,'' என்றார்.