வாலிபர் கொலை; 4 பேர் கைது
பாலக்காடு: குடும்ப தகராறில் ஏற்பட்ட மோதலில், வாலிபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் அடுத்த வடகரப்பதி பரிசிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ராஜ்குமார், 38. அவரது உறவினரான ஜானி பிரவீண், 35, என்பவருடன் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அன்று இரவு, ஜேம்ஸ் ராஜ்குமார், ஜானி பிரவீணின் வீட்டிற்கு சென்றார். அப்போது, ஜானி பிரவீண், அவரது மனைவியின் முகத்தில் மிளகாய் பொடி நீரை ஊற்றி, ஜேம்ஸ் ராஜ்குமார் அரிவாளால் வெட்டினார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த நண்பர்களும், அப்பகுதி மக்களும், ஜேம்ஸ் ராஜகுமாரை உருட்டு கட்டையால் தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜேம்ஸ் ராஜ்குமார் மற்றும் ஜானி பிரவீணை மீட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஜேம்ஸ் ராஜகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கொழிஞ்சாம்பாறை போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளியம்பாறையை சேர்ந்த ஜேசுதாஸ் ஸ்டீபன், 43, அவரது சகோதரர் அருள் பெர்க்மென்ஸ், 38, தினேஷ், 28, பிரன்ஹன், 39, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.