| ADDED : மார் 22, 2024 01:34 AM
புதுக்கோட்டை:இலுப்பூர் பகுதியில் உள்ள, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், ஈ.டி., எனும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் உள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2019, 2021, 2022 ஆண்டுகளில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, ஏற்கனவே வருமான வரித் துறையினர், அமலாக்க துறையினர் மற்றும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நேற்று காலை 8.00 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், 3 இன்னோவா கார்களில் வந்து, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி மற்றும் விஜயபாஸ்கரின் தாய் மட்டுமே இருந்தனர்.மேலும், வீட்டில் உள்ள பீரோ, அலமாரி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அறைகள் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனை மற்றும் விசாரணை எட்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அப்போது, அவரது வீட்டின் முன் அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் குவிந்தனர்.வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த விஜயபாஸ்கர் தந்தை சின்னத்தம்பியின் காரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காரில் நடத்திய சோதனையில் எதுவும் பிடிபடவில்லை.