| ADDED : ஆக 01, 2024 11:13 PM
பரமக்குடி : பரமக்குடி அருகே நெல்மடூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 7 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் மனு அளிக்க குவிந்தனர்.மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்து வருகிறது. இதன்படி பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் நெல்மடூர் ஊராட்சியில் அரசு திட்டங்கள் மக்களுக்கு சேரும் வகையில் முகாம் நடந்தது. இதில் நெல்மடூர், பி.புத்துார், பீர்க்கன்குறிச்சி, தடுத்தலான்கோட்டை, கீழப்பருத்தியூர், வழிமறிச்சான், மோசுகுடி ஆகிய கிராமங்கள் இணைக்கப்பட்டன. பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் தலைமை வகித்தார். தாசில்தார் சாந்தி, பி.டி.ஓ., கருப்பையா, ஊராட்சி தலைவர் சிந்தாமணி முன்னிலை வகித்தனர். அப்போது 15 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்று மக்களிடம் மனுக்களை பெற்றனர்.தொடர்ந்து தமிழக அரசு வீடு கட்டும் திட்டம் மற்றும் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கான ஒப்புதல் கடிதம் மக்களுக்கு வழங்கப்பட்டது.