| ADDED : ஆக 13, 2024 11:24 PM
தொண்டி : தொண்டி பேரூராட்சியில் லஞ்சம் வாங்கிய மூன்று அலுவலர்களை லஞ்ச ஒழிப்புதுறையினருக்கு காட்டிக் கொடுத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.தொண்டியில் மக்கள் நலப்பணிக்குழு செயல்படுகிறது. நேற்று தொண்டியில் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு இக்குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது.அதில் ஜூலை 4ல் தொண்டி முதல்நிலை பேரூராட்சியில் பணியாற்றிய செயல் அலுவலர் மகாலிங்கம், இளநிலை உதவியாளர் ரவி, தற்காலிக கம்யூட்டர் ஆப்பரேட்டர் தொண்டிராஜ் ஆகியோர் வீடு கட்ட கட்டட அனுமதி வழங்குவதற்காக ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் மற்றும் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.லஞ்சம் வாங்கிய அதிகாரிகளை காட்டிக் கொடுக்க திறமையாக செயல்பட்ட தொண்டியை சேர்ந்த இப்ராம்ஷா 51, நைனாமுகமது 50, ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. வி.ஏ.ஓ., சங்க மாவட்ட தலைவர் நம்புராஜேஸ், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, அரசு தொடக்கபள்ளி (மேற்கு) தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் அவர்களுக்கு விருது வழங்கினர்.அடுத்ததாக தொண்டியை சேர்ந்தவர் அகமது பாய்ஸ் 47. இவர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் நம்புதாளையை சேர்ந்த குருஜி 35, ஹிந்து, முஸ்லிம்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில் முகநுாலில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் குருஜியை கைது செய்தனர். அகமது பாய்ஸ்க்கு பேரூராட்சி செயல் அலுவலர் (ஓய்வு) செய்யது அலி விருது வழங்கினார்.